Saturday 29 December 2012

மன்மோகன் பாலர் பள்ளி

பிரதமர் இந்த வாரம் டெல்லியில் கூட்டிய தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களையும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. தமிழக முதல்வரிடம் கூட்டத்தில்  கேட்கப்பட்ட ஒரே கேள்வி; தமிழ்நாட்டின் மொத்த பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் 10 நிமிடங்களுக்கு மிகாமல் சொல்லவும்; 10 நிமிடங்களுக்கு பின் மணி அடித்து பேப்பர் புடுங்கப்படும் என்று கண்டிஷன் வேறு. பாவம் நம்ம முதல்வருக்கு 10 நிமிடத்தில் சொல்லி முடிக்க தெரியவில்லை. மணியடிச்சு முதல்வரோட பேச்சை பாதியிலேயே முடிக்க சொல்லிட்டாங்க.மக்கள் கிட்ட கேட்டிருந்தா இந்தியாவோட மொத்த பிரச்சனைகளையும் ஒரே நொடியில் சொல்லியிருப்பாங்க. காங்கிரஸ்-ம் மத்திய அரசும் தான் என்று.
நல்ல வேளை, நம் முதல்வர் அதிக நேரம் எடுத்ததுக்காக பெஞ்ச் மேல ஏறி நிக்க சொல்லாம போனாங்க அதுவரைக்கும் சந்தோசம்.
மன்மோகன் நீங்க பிரதமர் ஆயிட்டிங்க, இன்னும் மெமரி லாஸ்-ல பழைய வாத்தியார் வேலையே ஞாபகம் வச்சுக்கிட்டு ஸ்கூல் ரூல்ஸ் போட்டுக்கிட்டு இருக்கீங்க.

வாழ்க பிரதமர் பாலர் பள்ளிக்கூடம் !!

Friday 17 February 2012

நேற்று பெய்த மழை..


கரு மேகங்கள் இரண்டற கலந்து
சிறு தூறலாய் ஆரம்பித்த மழை,
அருவியாக பொழிந்து,
பெருநகரின்
கரி படிந்த மரங்களின்
இலைகளை கழுவி,
அரசு பேருந்துகளுக்கே உரிய
பெட்ரோலும் வியர்வையும் சேர்ந்த
வாசனையை துடைத்து,
துண்டு பீடி முதலாக கிடைத்த
அத்தனை கழிவுகளையும்
வாரி ஒதுக்கி
சாலைகள் மெழுகி
கடல் சேர்ந்தது..

மழை என்பது
கிராமங்களுக்கு வாழ்வாதாரம் !
நகரங்களுக்கு சுகாதாரம் !!

வாழிய மாமழையே!

Saturday 6 August 2011

டைவர்ஸ்


உன்னை
நானும்
என்னை
நீயும்
முழுமையாக
புரிந்து கொண்ட பொழுது..

Saturday 27 February 2010

கண்ணாடி

ஈருடல்
ஓருயிர்
உண்மையானது
கண்ணாடி
பார்க்கும் பொழுது
மட்டும்!

நடை பாதை ஓவியன்


கோவர்த்தன மலையை
குடையென ஆக்கி
மக்களைக் காக்கும்
கண்ணனை
வயிற்றுப் பசியோடு
வரைந்து முடித்து
நிமிர்ந்து பார்த்த பொழுது
வந்தது மழை.
குடையுடன் கடவுள்
அழிந்து கொண்டிருந்தார்.